‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், தனிநபர் வெறுப்புக் குற்றம் (Hate Crime) என்றும் கியூபெக் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரினியர் (Ian Lafrenière) உறுதிப்படுத்தியுள்ளார்.
கியூபெக் மரணப் பரிசோதகர் அலுவலகம் (Coroner’s Office) வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த தாக்குதலை மேற்கொண்ட கொலையாளி, அல்பர்ட்டா மாகாணத்தின் லெத்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவரும் 25 வயதானவருமான செத் ஸ்காட் ஹாட்ஃபீல்ட் (Seth Scott Hatfield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவன் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட நீண்ட கொள்கை அறிக்கை ஆவணம் 104 பக்கங்கள் கொண்டது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கெதிரான தீவிர வெறுப்பு மற்றும் நவீனப் பெண்கள் தங்களை நிராகரிப்பதாகக் (Hypergamy Belief) குற்றம் சாட்டும் தீவிரவாதக் கருத்துக்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.
தாராளமயமாக்கல் மற்றும் முதலாளித்துவத்தை ஆயுதப் புரட்சி மூலம் அழிக்க வேண்டும் என்பதும் அவனது நோக்கமாக இருந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில் அப்பகுதியிலிருந்த பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த “வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவு” (Shelter-in-place) தற்போது முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண சுயாதீனப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு (BEI) இச்சம்பவம் குறித்த விரிவான குற்றவியல் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளது.


