ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாணம், கிச்சனர் நகருக்கு வடமேற்கே உள்ள மேப்ள்டன் பட்டினத்தின் (Mapleton Township) வீதிச் சந்திப்பு ஒன்றில், 10 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் வேன் ஒன்றும், எஸ்யூவி (SUV) ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் வேனில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் உயிர்பிழைத்த 5 பேரும் பலத்த காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் ஜெர்மன் மொழி பேசும் பாரம்பரிய ‘மென்னோனைட்’ (Mennonite) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த வேனில் இருக்காத அக்குடும்பத்தின் இரண்டாவது மூத்த மகளான நான்சி டோர்க்சென் (Nancy Doerksen), தனது குடும்பத்தின் மருத்துவச் செலவுகள் மற்றும் இறுதிச்சடங்கு பணிகளுக்காகத் ஆன்லைன் நிதித் திரட்டல் பக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


