மொண்ட்ரியல் பிராந்தியத்திற்கு உட்பட்ட வெஸ்ட்மவுண்ட் (Westmount) பகுதியில் யூத வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட தீவைப்பு மற்றும் குண்டுவெடிப்பு முயற்சி தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில், வெஸ்ட்மவுண்ட் (Westmount) பகுதியில் உள்ள புகழ்பெற்ற யூத வழிபாட்டுத் தலமான (Synagogue) ‘டெம்பிள் இமானுவல்-பெத் ஷலோம்’ (Temple Emanu-El-Beth Sholom) கட்டிடத்தின் மீது நள்ளிரவில் தீவைப்பு மற்றும் குண்டுவெடிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்செயல் தொடர்பாக 38 வயதுடைய மொண்ட்ரியல் ஸ்டீவன் லூ (Steven Luu) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மீது தீவைப்பு மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை உட்பட 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவரது பிணை மனு மீதான விசாரணை அவசரமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணைகளின் போது, இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்புக் குற்றம் என்பதை நேரடியாக உறுதிப்படுத்தும் வாக்குமூலங்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்செயல் தொடர்பில், மத்திய பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தனது எக்ஸ் சமூகவலைத் தளத்தில், கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


