சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோரின் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்ட மூலத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.
இணையவழியில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்தச் சட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் இணையவழித் தீங்குகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
இந்த புதிய சட்டத்தின்படி, இன்ஸ்டாகிராம் (Instagram), டிக் டாக் (TikTok), ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற முன்னணி சமூக வலைத்தளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்படவுள்ளது.
சிறுவர்களின் இணையப் பாதுகாப்பைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ‘கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு’ (Digital Safety Commission of Canada) என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்படவுள்ளது.
அண்மைக்காலமாகப் பயன்பாடு அதிகரித்துள்ள ஏஐ சாட்பாட்களினால் (Chatbots) குழந்தைகளுக்கு ஏற்படும் தேவையற்ற உளவியல் ஆபத்துகளைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தனித்துவமான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


