மொன்றியல் தீவுக்குட்பட்ட வெஸ்ட்மவுண்ட் (Westmount) பிராந்தியத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யூத வழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது தீவைப்புத் தாக்குதலை நடத்த முயன்றவர் மொன்றியலைச் சேர்ந்த ஸ்டீவன் லூ (Steven Luu – 38) எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வழிபாட்டுத் தலத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதன் ஊடாக உள்ளே தீப்பற்றும் எரியும் பொருட்களை (Incendiary Materials) வீசித் தீயை மூட்ட முயன்றுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்டீவன் லூ, மொன்றியலில் உள்ள கியூபெக் மாகாண நீதிமன்றத்தில் (Quebec Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கியூபெக் மாகாணச் சட்ட அமுலாக்கல் பிரிவினர் அவர் மீது 6 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தேக நபர் மீதான பிணை விசாரணை கியூபெக் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளியின் மனநிலை குறித்த மருத்துவப் பகுப்பாய்வு அறிக்கை (Psychological Evaluation) இன்னும் பூர்த்தியாகாத காரணத்தினால் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண அரச தரப்புச் சட்டத்தரணிகளின் (Crown Prosecutors) கோரிக்கைக்கு இணங்கவே, இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் யூத மக்களுக்கு எதிரான ஒரு வெறுப்புக் குற்றமா (Hate Crime) என்ற கோணத்தில், மொன்றியல் பொலிஸாரின் விசேட வெறுப்புக் குற்றப்பிரிவு (SPVM’s Hate Crimes Unit) விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, அந்த யூத ஆலயத்தின் பெண் மதகுரு (Rabbi) லிசா க்ரஷ்கோவ் (Lisa Grushcow), கியூபெக் மாகாணத்தில் யூத எதிர்ப்பு (Antisemitism) மற்றும் மத வெறுப்புணர்வுகள் மிக அபாயகரமாக அதிகரித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


