மொன்றியல் நகரில் உள்ள போர்டோ சிறைச்சாலையின் பணியாளர்கள் (Prison Workers) மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குக் கைதிகளின் பங்காளிகளால் கடுமையான உயிராபத்து மற்றும் பழிவாங்கல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ‘போர்டோ சிறைச்சாலையில்’ (Bordeaux Prison) கைதி ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு கடமையாற்றும் பணியாளர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பற்றச் சூழலில் தவிக்கும் தங்களது பணியாளர்களுக்கு கியூபெக் மாகாண அரசு உடனடியாகப் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிறைச்சாலைப் பணியாளர்கள் தொழிற்சங்கம், உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களினதும், அரசாங்கத்தினதும் ஆதரவைக் கோரி அவசரப் போராட்டக் குரலை வெளியிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமாக மொன்றியல் புனர்வாழ்வு மையம் (Etablissement de détention de Montréal) என்று அழைக்கப்படும் போர்டோ சிறைச்சாலையில், கடந்த வாரம் கைதி ஒருவர் திடீரென மரணமடைந்தார். இந்த மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், சிறை அதிகாரிகளின் அத்துமீறலால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது எனச் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் குழுக்களும், வெளியே இருக்கும் அவர்களின் பங்காளிகளும் குற்றம் சுமத்தத் தொடங்கியுள்ளனர்.
இதன் விளைவாக, சிறை வளாகத்திற்குள் மாத்திரமன்றி, பணியாளர்கள் தங்களது கடமைகளை முடித்துவிட்டு வீடுகளுக்குத் திரும்பும் போதும் அவர்களை இலக்கு வைத்துப் பழிவாங்கும் நோக்குடன் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலைப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் Mathieu Lavoie அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சிறைச்சாலைப் பணியாளர்களின் முகவரிகள், புகைப்படங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை, பாதாள உலகக் குழுக்கள் சேகரித்து அச்சுறுத்தி வருகின்றன. சிறைப் பணியாளர்கள் மிகக் கடுமையான உளவியல் ரீதியான அழுத்தத்திற்கும், மரண பயத்திற்கும் மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். ஆனால் கியூபெக் பொதுப் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்வித கூடுதல் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என விமர்சிக்கப்படுகின்றது.
இந்த உயிராபத்துச் சூழல் காரணமாகப் போர்டோ சிறைச்சாலையின் பல பிரிவுகளில் பணியாளர்கள் தங்களின் பணிப் பகிஷ்கரிப்பை (Work stoppage) அல்லது மந்தகதிப் போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


