கியூபெக் (Quebec) மாகாண அரசாங்கம் தனது அடுத்த ‘தலைமை விஞ்ஞானி’ (Chief Scientist) என்ற மிக உயரிய பதவிக்கு, புகழ்பெற்ற ‘Les Cowboys Fringants ராக் இசைக்குழுவின் பேஸ் கிதார் கலைஞரும் (Bassist), சுற்றுச்சூழல் பொருளாதாரப் பேராசிரியருமான ஜெரோம் டுப்ராஸ் (Jérôme Dupras) என்பவரை நியமித்துள்ளது.
கலை உலகிலும் அறிவியல் உலகிலும் ஒரே நேரத்தில் முத்திரை பதித்து வரும் ஒரு பன்முக ஆளுமைக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மாகாணத்தின் கல்வி மற்றும் கலாசார வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கியூபெக் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த உத்தியோகபூர்வ முடிவு குறித்த விபரங்களை, மாகாணப் பொருளாதார, கண்டுபிடிப்பு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, கியூபெக் மாகாணத்தில் அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் அரசாங்கத்திற்கான மூலோபாய அறிவியல் ஆலோசனைகளை வழங்கும் முதன்மை அமைப்பான ‘கியூபெக் ஆராய்ச்சி நிதியத்தின்’ (Fonds de recherche du Québec) தலைவராகவும், மாகாணத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் ஜெரோம் டுப்ராஸ் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இப்பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து, சுமார் 15 ஆண்டுகள் மிக நீண்ட காலம் இப்பதவியை வகித்ததுடன், நடப்பு ஆண்டில் ஓய்வுபெறும் புகழ்பெற்ற விஞ்ஞானி ரெமி குரியன் (Rémi Quirion) என்பவரின் இடத்திற்கே தற்போது ஜெரோம் டுப்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
