மொன்றியலின் தெற்கு – லோங்குயில் பகுதியில் உள்ள மொன்றியல் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தில், சிறிய ரகத் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரு தனியார் செஸ்னா 177 கார்டினல் (Cessna 177 Cardinal) ரக சிறிய விமானம், ஓடுதளத்தில் தரையிறங்குவதற்கான திட்டத்தில் (Landing maneuver) ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தகவல் கிடைத்தவுடன், விமான நிலைய தீயணைப்புப் பிரிவினரும் லோங்குயில் பிராந்திய அவசரக்கால மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்து நிகழ்ந்த போது விமானத்தில் விமானி மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
அவர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விமானியின் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என லோங்குயில் தீயணைப்புத் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து மொன்றியல் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டதால், வணிக ரீதியிலான விமானச் சேவைகள் சில மணிநேரங்களுக்குப் பாதிக்கப்பட்டன.
விபத்து நடந்த ஓடுதளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரக் காலப் பரிசோதனைகள் மற்றும் தூய்மைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விமான ஓடுதளம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
“தேவையான அனைத்து பாதுகாப்புப் சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, விமான நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் தற்போது முற்றிலும் பாதுகாப்பான முறையில் வழமைக்குத் திரும்பியுள்ளன” என்று மொன்றியல் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

