நாட்டிலிருந்து மாகாணம் ஒன்று பிரிந்து தனிநாடு அமைப்பதற்கான சட்டபூர்வ முறைமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நேரடியாக பதிலளிக்காமல், அக்கேள்வியைத் தவிர்த்துள்ளார்.
மாகாணப் பிரிவினைக்கான வாக்கெடுப்புகளில் வெறும் “50 சதவீத வாக்குகளுடன் மேலும் ஒரே ஒரு வாக்கு” என்ற எளிமையான பெரும்பான்மை மட்டுமே கிடைக்கும் பட்சத்தில், அதனை, ” மாகாணம் பிரிந்து செல்வதற்கான உத்தியோகபூர்வ அங்கீகாரமாக, மத்திய அரசு ஏற்குமா என்ற கேள்வியே முன்வைக்கப்பட்டது.
ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் இந்தக் கேள்வியை முன்வைத்த போதே, பிரதமர் பதிலளிக்காமல் மௌனத்தைக் கடைப்பிடித்துள்ளார்.
அல்பர்ட்டா மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் தற்பொழுது தீவிரமடைந்து வரும் பிரிவினைவாத அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், இந்தக் கேள்வி எழுப்பட்டிருந்தது.
அதேவேளை, பிரிவினைவாத வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிப்பது, ஒரு “அபாயகரமான ஏமாற்று வித்தை” (Dangerous Bluff) என்றும் பிரதமர் மார்க் கார்னி கடுமையாக எச்சரித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், கியூபெக் இறையாண்மை குறித்து, புதிய வாக்கெடுப்பை நடத்துவதாக ‘பார்டி கியூபெகோயிஸ்’ (Parti Québécois) கட்சி வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
