கியூபெக் மாகாணத்தில், குறிப்பிட்ட சில மளிகைப் பொருட்களுக்கான மாகாண விற்பனை வரியை (TVQ) நிரந்தரமாக நீக்குவது உட்பட 3 முக்கிய நிதியுதவிச் சலுகைகளை முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கியூபெக் (Quebec) மாகாண மக்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான வாழ்க்கைச் செலவின மற்றும் பணவீக்க நெருக்கடிகளுக்குத் தற்காலிகத் தீர்வு வழங்கும் வகையில், இந்தச் சலுகைகள் அமைந்துள்ளன.
இந்த அதிரடித் திட்டங்கள் மூலம் கியூபெக்கில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கியூபெக்கின் ஷெர்புரூக் (Sherbrooke) நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கியூபெக் மாகாண நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Eric Girard) முன்னிலையில் பிரீமியர் கிறிஸ்டின் பிரெஷெட் இந்த “நிவாரணச் சலுகைகள் பற்றிய அறிவிப்பை” (Bouquet of Measures) வெளியிட்டார்.
பணவீக்கம் ஒட்டுமொத்தக் கியூபெக் மக்களையும் பாதித்துள்ளது எனவும் இந்தச் சூழலில் மக்களுக்குக் கொஞ்சம் நிதியியல் ரீதியான ஒக்ஸிஜனை வழங்க வேண்டியது தமது அரசாங்கத்தின் முன்னுரிமை எனவும் முதல்வர் இதன்போது தெரிவித்துள்ளார்.
