மொன்றியல் நகரில் பாதாள உலக மாஃபியா (Mafia) குழுவோடு தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரின் ஆடம்பர இல்லத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தீவைப்புச் சம்பவம் (Arson) குறித்து, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மொன்றியல் காவல்துறையின் விசேட தீவைப்பு ஒழிப்புப் புலனாய்வுப் பிரிவினரே இந்த குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில், இந்த வீட்டில் பலத்த சத்தத்துடன் கண்ணாடி உடையும் ஓசையும், அதனைத் தொடர்ந்து பெரிய வெடிப்புச் சத்தமும் கேட்டதாக அயலவர்களால் அவசரக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் ஒரு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்பவ இடத்தில் முதற்கட்ட சோதனைகளை நடத்திய மீட்புக்குழுவினர், இது தற்செயலாக நடந்த விபத்து அல்ல எனக் கண்டறிந்ததுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றச்செயல் என்பதற்கான ஆதாரங்களையும் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் உடனடியாக மொன்றியல் காவல்துறையின் விசேட தீவைப்பு ஒழிப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
