தேசிய ஹொக்கி லீக் (NHL) தொடரின் மிக முக்கியமான 7 ஆவது போட்டியில் மொன்றியல் கனடியன்ஸ் (Montreal Canadiens) அணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மொன்றியல் மாநகரத்தின் மையப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கலவரத் தடுப்புப் பொலிஸார் (Riot Police) அதிரடியாகக் குவிக்கப்பட்டனர்.
போட்டி பஃபலோ நகரில் நடைபெற்ற போதிலும், மொன்றியலில் உள்ள பெல் சென்டர் (Bell Centre) விளையாட்டு அரங்கம் முழுவதும் ரசிகர்கள் ஒன்று திரண்டு போட்டியை நேரலையாகப் பார்ப்பதற்கான விசேட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மொன்றியல் அணி வெற்றி பெற்ற அடுத்த நிமிடமே, அரங்கிற்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் அருகிலிருந்த மதுபானசாலைகளில் இருந்தவர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 25,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மொன்றியலின் பிரதானவீதிகளான செயின்ட்-காதரின் (Saint-Catherine St), பீல் வீதி (Peel St) மற்றும் ரெனே-லெவெஸ்க் (René-Lévesque Blvd) ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் திரண்டனர்.
அடர்ந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வணிக ரீதியிலான வாணவெடிகளை (Fireworks) வெடிக்கச் செய்ததோடு, வீதி எங்கும் அவசரக் கால நெருப்புப் பந்தங்களை (Flares) ஏற்றி ஆரவாரம் செய்தனர்.
இந்த கொண்டாட்டங்கள் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறும் அபாயம் ஏற்பட்டதை அடுத்து, மொன்றியல் மாநகரப் பொலிஸார் (SPVM) தங்களது விசேட கவச உடைகளை அணிந்த கலவரத் தடுப்புப் படையினரை வீதிகளில் களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கலவரத் தடுப்புப் படையினர் அந்தக் கூட்டத்தைக் கலைக்க முற்பட்ட போது, மதுபோதையில் இருந்த சில குழுக்கள் வாக்குவாதத்திலும் கைக்கலப்பிலும் (Altercation) ஈடுபட்டனர். இதனையடுத்து, கண்ணீர்ப்புகை மற்றும் இலகு ரகத் தடியடிப் பிரயோகங்களை மேற்கொண்ட கலவரத் தடுப்புப் படையினர், அந்தக்
கூட்டத்தை முழுமையாகப் கலைத்தமை குறிப்பிடத்தக்கது.
