இராணுவத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் கனடா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது எனக் குற்றம் சாட்டி, கனடாவுடனான பல தசாப்த காலப் பழமையான கூட்டு இராணுவக் கட்டுப்பாட்டு வாரியத்தை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திடீரென தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனின் கொள்கை வகுப்பிற்கான போர்க்கால பிரதி அமைச்சர் எல்ப்ரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), இன்று இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், அதாவது 1940 ஆம் ஆண்டில் வட அமெரிக்கக் கண்டத்தின் பாதுகாப்பைக் கூட்டாக உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிரந்தரக் கூட்டுப் பாதுகாப்பு வாரியத்தின் (Permanent Joint Board on Defense – PJBD) செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மார்க் கார்னி உலகளாவிய அரங்குகளில் பேசி வரும் கருத்துக்களே அமெரிக்காவின் இந்தத் திடீர் கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னி உரையாற்றுகையில், அமெரிக்காவைத் தாண்டி பிற சர்வதேச நாடுகளுடன் கனடா புதிய பாதுகாப்புக் கூட்டணிகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கப் பிரதி அமைச்சர் கோல்பி, கனடாவின் வெற்றுப் பேச்சுக்கும் நிஜ உலக யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை தங்களால் இனி சகித்துக்கொள்ள முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.
”ஒரு நாடு உலக அரங்கில் செல்வாக்கு செலுத்த வேண்டுமாயின், அதற்கு இணையாகப் பாதுகாப்பு நிதியையும் (Defense Spending) ஒதுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தன்னிச்சையான முடிவு தொடர்பில், நாட்டின் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் எரின் ஓடூல் (Erin Toole), அமெரிக்காவின் இந்த முடிவை முற்றிலும் தவறானது" என்று விமர்சித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் சீனாவுக்குச் சென்று திரும்பியுள்ள நிலையிலும், ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் ஹோர்முஸ் நீரிணை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள இக்கட்டான நேரத்திலும், அமெரிக்கா தனது நீண்டகால நட்பு நாட்டைப் புறக்கணிப்பது ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து,பில்ட், பார்ட்னர், பை (Build, Partner, Buy) என்ற கொள்கையின் கீழ் நாட்டின் உள்ளேயே சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கும் புதிய இராணுவத் தொழிற்றுறை வியூகத்தை அண்மையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன் காரணமாகவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தரப்பானது பழிவாங்கும் நோக்கில், இந்த கூட்டு வாரியத்தை முடக்கியுள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எரிசக்தி மற்றும் கார்பன் வரி விவகாரங்களில் அவுஸ்திரேலியா மற்றும் பிற சர்வதேச நாடுகளின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிரதமர் மார்க் கார்னிக்கு, அமெரிக்காவின் இந்த இராணுவ முடக்கம் ஒரு புதிய ராஜதந்திரச் சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
