கப்பல்களூடாக கடல்வழியாக காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேரை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களுடன், துருக்கியின் மர்மரிஸ் (Marmaris) துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்ட 54 சிறிய ரகக் கப்பல்களே இவ்வாறு இஸ்ரேலியக் கடற்படையினரால் வழிமறித்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சைப்பிரஸ் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பாற்பட்டதும், காசாக் கரையில் இருந்து சுமார் 250 கடல் மைல் தொலைவில் உள்ளதுமான சர்வதேசக் கடற்பரப்பில் வைத்தே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலிய கமாண்டோ படையினர் கப்பல்களைச் சூழ்ந்து தாக்குதல் நடத்திய காட்சிகள், ஆர்வலர்களால் இணையதளங்களில் நேரலை (Livestream) செய்யப்பட்டன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடிய ஆர்வலர்கள் சிறைக்குள் ‘உண்ணாவிரதப் போராட்டத்தை’ ஆரம்பித்துள்ளதாகத் தப்பிவந்த ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்மைக் கடத்தியதைக் கண்டித்தும், காசா மக்களின் அவலநிலையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டவுமே, ’ உண்ணாவிரதப் போராட்டத்தை’ தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடிய ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
