மொன்றியலின் புகழ்பெற்ற கான்கார்டியா பல்கலைக்கழக (Concordia University) பேராசிரியரும், சர்வதேச அளவில் அறியப்பட்ட பரிணாம நடத்தை விஞ்ஞானியுமான (Evolutionary Behavioral Scientist) முனைவர் காட் சாத் (Dr. Gad Saad), நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தாம் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறப் போவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மொன்றியல் பல்கலைக்கழக வளாகங்களில் நிலவும் அதீத அரசியல் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களே தனது இந்த முடிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ஜோ ரோகனின் (Joe Rogan) ‘தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்’ (The Joe Rogan Experience) பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடிய போதே பேராசிரியர் காட் சாத் தனது முடிவை வெளியிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் (Ole Miss) சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த தாம், இந்த கோடைக்காலம் முதல் மிசிசிப்பியில் உள்ள ஆக்ஸ்போர்ட் நகருக்குத் தனது குடும்பத்துடன் நிரந்தரமாக இடம்பெயரவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, மொன்றியலில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் யூதர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரவாதக் கருத்துக்களும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் காட் சாத் குறிப்பிட்டார்.
தமக்குத் தொடர்ச்சியாகக் ‘கொலை மிரட்டல்கள்’ (Death Threats) வந்ததன் காரணமாக, கான்கார்டியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
லெபனான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட யூத வம்சாவளியினரான காட் சாத், கடந்த 1975 ஆம் ஆண்டு லெபனான் உள்நாட்டுப் போரின் போது தனது குடும்பத்துடன் மொன்றியலில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
