மொன்றியலின் மிகமுக்கிய வணிக வீதியான செயிண்ட் கத்தரீன் (Ste- Catherine) தெருவில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை, இரவு பகலாக 24 மணிநேரமும் முன்னெடுத்து விரைவில் முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி வணிகர்கள் மொன்றியலின் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரிய உள்கட்டமைப்புத் திட்டத்தினால் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தத் திட்டம் 2029-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தெருவைச் சீரமைக்க இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்வது நகரத்தின் பொருளாதாரத்தைக் கொலை செய்வதற்குச் சமம் என மொன்றியலின் வணிகர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
சுமார் 418 மில்லியன் டொலர் செலவில் நடைபெறும் இந்தத் திட்டத்தில், பழைய குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, நடைபாதைகள் விரிவாக்கப்படுகின்றன.
இதற்காக வீதிகள் தோண்டப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் குறைந்து பல கடைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் தமக்கு ஆண்டுக்கு 40,000 டொலர்கள் வரை நட்டஈடு வழங்கினாலும், அது தங்களுக்கு ஏற்படும் லட்சக்கணக்கான டொலர் இழப்பிற்கு ஈடாகாது என வணிகர்கள் கூறுகின்றனர்.
மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெராடா (Soraya Martinez Ferrada), ஏற்கனவே இந்தத் திட்டத்தை ஓராண்டு முன்னதாக முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக மேலதிகமாக 7 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
