மொன்றியலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, அபராதம் செலுத்தத் தவறியதற்காக மீண்டும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.என்.சி-லாவலின் (SNC-Lavalin) நிறுவனத்தின் முன்னாள் உயர்மட்ட அதிகாரி சாமி பெபாவி (Sami Bebawi), சிறைக்கு அனுப்பப்படாமல் இடைக்காலத் தங்குமிடத்திற்கு (Halfway house) மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி அன்று, மொன்றியல் மேல் நீதிமன்ற நீதிபதி, சாமி பெபாவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
2019-ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விதிக்கப்பட்ட 25 மில்லியன் டாலர் அபராதத்தைச் செலுத்தத் தவறியதே இதற்குக் காரணமாகும்.
இதேவேளை, நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு இருந்தபோதிலும், கனேடிய சிறைச்சாலைத் திணைக்களம் (Correctional Service Canada) அவரைச் சிறைக்கு அனுப்பாமல், ஒரு இடைக்காலத் தங்குமிடத்திற்கு அனுப்பி ‘பகல்நேரப் பிணையில்’ (Day Parole) விடுவித்துள்ளது.
பெபாவியின் குற்றங்கள் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்தவை என்பதால், பழைய சட்ட விதிகளின்படி தண்டனைக் காலத்தின் மிகச்சிறிய பகுதியை நிறைவு செய்தாலே நிபந்தனை அடிப்படையில் வெளியில் இருக்க முடியும் என்ற விதியைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சிக் காலத்தில், அங்கு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகப் பல மில்லியன் டாலர்களை லஞ்சமாகக் கொடுத்த குற்றத்திற்காக 2020-ஆம் ஆண்டில் பெபாவிக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
