மொன்றியலில் உள்ள செயின்ட்-லோரண்ட் (Saint-Laurent) உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் கூடைப்பந்து பயிற்சியாளர் சார்லஸ்-சேவியர் போய்ச்லார்ட்டுக்கு (Charles-Xavier Boislard), 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது மாணவியைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 48 வயதுடைய போய்ச்லார்ட், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்தப் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். அப்போது 12 வயதாக இருந்த மாணவியின் திறமையைப் பாராட்டி,
அவருக்கு உதவி செய்வது போல நெருக்கமான போய்ச்லார்ட், அந்தச் சிறுமிக்கு 16 வயதாகும் போது அவரைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
தற்போது 31 வயதாகும் ஷபேகா டெய்லர் (Shabeka Taylor) என்ற அந்தப் பெண், தனது அடையாளத்தை வெளிப்படுத்தி நீதிக்காகப் போராடினார். பயிற்சியாளர் எனது கண்ணியத்தையும், இளமைக்காலத்தையும் பறித்துவிட்டார் என அவர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர் எரிக் டி சாம்ப்லைன் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பிக்கையுடன் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதைத்த இந்தப் பயிற்சியாளரின் செயல் மன்னிக்க முடியாதது எனத் தெரிவித்தார்.
போய்ச்லார்ட் ஆரம்பத்தில் தன் மீதான பழியை ஏற்க மறுத்த போதிலும், ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் இறுதியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக ஷபேகா டெய்லர் சுமார் 3.2 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி சிவில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். பள்ளி நிர்வாகம் இந்தப் புகார்களை அலட்சியம் செய்ததாக அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
இதேவேளை, இதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு பயிற்சியாளரான ரொபர்ட் லூ என்பவரும் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
