மொன்றியலின் வெஸ்ட் ஐலேண்ட் (West Island) பகுதியில் தனது சொந்த மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் டொலார்ட்-டெஸ்-ஒர்மோக்ஸ் (DDO) பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த அவசர அழைப்பையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 17 வயதுச் சிறுமியை மீட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுத்தியலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தை இன்று மொன்றியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இவர் மீது கொலை முயற்சி, கடுமையான உடல் ரீதியான தாக்குதல் மற்றும் அபாயகரமான ஆயுதத்தை வைத்திருந்தமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவரது தந்தையின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
