கியூபெக் மாகாணத்தின் ஆளுங்கட்சியான CAQ கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு இன்று ஆரம்பமானது.
சுமார் 65,000 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ள இந்த உட்கட்சித் தேர்தல் ஆனது, கியூபெக் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை மறைமுகமாகத் தீர்மானிக்கவுள்ளமையால், பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கியூபெக்கின் தற்போதைய முதலமைச்சர் பிரான்சுவா லெகோ பதவி
விலகுவதைத் தொடர்ந்து நடைபெறும் இந்தத் தேர்தல், நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்படுகிறது.
கியூபெக் ஆளுங்கட்சியான CAQ கட்சியின் உறுப்பினர்கள் இணையதளம் அல்லது தொலைபேசி வாயிலாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5:00 மணி
வரை வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உட்கட்சித் தேர்தலில், தெரிவு செய்யப்படவுள்ள புதிய தலைவரின் பெயர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ட்ரம்மண்ட்வில் நகரில் நடைபெறும் பிரம்மாண்டமான CAQ கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இந்த உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெறுபவர் அடுத்த வார தொடக்கத்தில் கியூபெக்கின் புதிய முதலமைச்சராக உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பார்
என எதிர்பார்க்கப்படுகின்றது. 2011-ஆம் ஆண்டில் பிரான்சுவா லெகோவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி, முதன்முறையாக ஒரு புதிய தலைவரின் கீழ் இயங்கப்போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
