கியூபெக் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்சித் தலைமைப் போட்டியில், வேட்பாளர் பெர்னார்ட் டிரைன்வில்லுக்கு (Bernard Drainville) மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் (Simon Jolin-Barrette), தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் பிரான்சுவா லெகோ பதவி விலகுவதைத்தொடர்ந்து நடைபெறும் இந்தப் போட்டியில், இது ஒரு மிக முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. மொன்றியலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாகாண நீதி அமைச்சர் சைமன் ஜோலின் – பாரெட், ”கியூபெக்கின் தனித்துவமான அடையாளம், பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றைக் காக்க டிரைன்வில்லே தகுதியானவர் ” எனக் குறிப்பிட்டார்.
இவருடன் இணைந்து போக்குவரத்து அமைச்சர் ஜோனதன் ஜூலியன் மற்றும் சமூக சேவை அமைச்சர் சோனியா பெலாஞ்சர் ஆகியோரும் டிரைன்வில்லுக்குத் தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர்.
கியூபெக்கின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் முடிவு, மாகாணத்தின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் மொழிச் சட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
