கனடாவின் தேசிய விமானச் சேவையான ஏர் கனடா (Air Canada) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ, இந்த ஆண்டு இறுதிக்குள் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து அவர் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்ட இரங்கல் செய்தி, பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நியூயோர்க்கின் லா கார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு கனேடிய விமானிகள் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து நான்கு நிமிட இரங்கல் வீடியோ ஒன்றை மைக்கேல் ரூசோ வெளியிட்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு மொழியில் பேசாமல், அந்த வீடியோவில் Bonjour மற்றும் Merciஎன்ற இரண்டு சொற்களைத் தவிர மற்ற அனைத்தையும் ஆங்கிலத்திலேயே அவர் பேசினார்.
உயிரிழந்த விமானிகளில் ஒருவர் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த பிரெஞ்சு மொழி பேசுபவர் என்பதால், ரூசோவின் இந்தச் செயல் பெரும் மரியாதைக்குறைவாகக் கருதப்பட்டது. பிரதமர் மார்க் கார்னி, ரூசோவின் செயலை நிதானமற்ற மற்றும் இரக்கமற்ற செயல் எனச் சாடினார்.
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ, பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத ஒருவர் நாட்டின் தேசிய விமானச் சேவையின் தலைவராக இருக்கத் தகுதியற்றவர் எனக் கூறி அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தப் புகார் தொடர்பாக சுமார் 2,100-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மொழி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. தனது மொழித்திறன் குறைபாட்டினால் ஏற்பட்ட தேவையற்ற சர்ச்சைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பிவிட்டதாக மைக்கேல் ரூசோ, வருத்தம் தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு பதவியேற்ற போதே பிரெஞ்சு மொழியைக் கற்கப் போவதாக அவர் உறுதியளித்திருந்தும், ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் அவரால் இன்னும் சரளமாகப் பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் கனடாவின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்யும் போது, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்ற ஒருவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.
