சீனா மீதான புகாரை, ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மா (Michael Ma) கேள்விக்குள்ளாக்கியமை, கனேடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உற்பத்தித் துறையில் நிலவுவதாகக் கூறப்படும் கட்டாய உழைப்பு (Forced Labour) தொடர்பான புகாரையே அவர் கேள்விக்குட்படுத்தினார். இந்த விவகாரத்தில் அவர் மனித உரிமை ஆர்வலர்களைக் அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று கூடியது. இதில் சாட்சியமளித்த ஒட்டாவா பல்கலைக்கழக ஆய்வாளர் மார்கரெட் மெக்காயிக்-ஜோன்ஸ்டனிடம், மைக்கேல் மா கேள்விகளை எழுப்பினார்.
சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் கட்டாய உழைப்பு நடப்பதை நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் பார்த்தீர்களா? என மைக்கேல் மா மீண்டும் மீண்டும் கேட்டார். ஆய்வாளர் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டிய போது, அப்படியானால் இவை வெறும் வதந்திகளா? (Hearsay) என மைக்கேல் மா கேட்டது குழுவில் இருந்த மற்ற
உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மைக்கேல் மாவின் இந்தப் போக்கு, சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது போல் இருப்பதாகக் கன்சர்வேடிவ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடா ஏற்கனவே சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை இனப்படுகொலைஎன அங்கீகரித்துள்ள நிலையில், ஒரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது என கன்சர்வேடிவ் கட்சியினர் தெரிவித்தனர். பேச்சு தொடர்பில் சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, மைக்கேல் மா தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
