கியூபெக் மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் வீடமைப்பு நெருக்கடி மற்றும் வீடற்றோர் எண்ணிக்கையைத் தணிக்க, மாகாண அரசு தனது புதிய பட்ஜெட்டில் விசேட நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது.
மாகாணம் பெரும் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சூழலிலும், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பட்ஜெட்டின்படி, குறைந்த வருமானம் பெறுவோருக்கான சமூக வீடுகளை (Social Housing) நிர்மாணிக்க 600 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாகாணம் முழுவதும் சுமார் 3,000 புதிய மலிவு விலை வீடுகளைக் கட்ட கியூபெக் அரசு திட்டமிட்டுள்ளது.
சந்தையில் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமே, வாடகை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் தெரிவித்துள்ளார்.
மொன்றியல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் தங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவ புதிய பட்ஜெட்டில் 120 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

