கியூபெக் மாகாணத்தில் வாழும் ஆங்கிலம் பேசும் மக்கள், தங்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளைத் தாய்மொழியில் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக, நாட்டின் செனட் சபை (Senate) எச்சரித்துள்ளது.
ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர் இருமொழிப் புலமையுடன் (Bilingual) இருக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்துள்ள செனட் குழு, மொழித் தடையால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
செனட் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில், அவசர சிகிச்சையின் போதும் அல்லது முதுமை மறதி (Dementia) போன்ற நோய்களின் போதும், மக்கள் தங்களுக்குத் தெரிந்த இரண்டாவது மொழியில் பேசுவது கடினம் எனக் கூறப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழலில் இருப்பவர்களிடம் பிரெஞ்சு மொழியில் மட்டுமே பேச வேண்டும் என எதிர்பார்ப்பது முறையான சிகிச்சைக்குத் தடையாக அமையும் என செனட்டர் அலிஸ்டர் சுரேட் (Senator Allister Surette) சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் மொழிச் சட்டங்கள் காரணமாக, மருத்துவத் துறையில் ஆங்கிலம் பேசும் ஊழியர்களைப் பணியமர்த்துவதில் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன.
குறிப்பாக காஸ்பே (Gaspé) போன்ற கிராமப்புறப் பகுதிகளில் 10% மக்கள் ஆங்கிலம் பேசினாலும், அங்கு அவர்களுக்குச் சேவையளிக்க ஒரு இருமொழி மருத்துவமனை கூட இல்லை. இதனால் முதியவர்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணம் செய்து மொன்றியலுக்கு வரவேண்டிய அவலம் நீடிக்கிறது.
இந்த நெருக்கடியைச் சமாளிப்பது தொடர்பில், செனட் குழு 14 முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சுகாதாரம் என்பது மாகாண அரசின் பொறுப்பாக இருந்தாலும்,
அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என செனட் சபை வலியுறுத்தியுள்ளது.
