டொராண்டோ தொகுதிகளில் போலி வேட்பாளர்களை நிறுத்தி நிதி வசதியைப் பெருக்கும் தந்திரத்தைச் செய்வதாக பிளாக் கியூபெக் (Bloc Québécois) கட்சி மீது, விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாக் கியூபெக் (Bloc Québécois) கட்சி தலைவர் ஈவ் – பிரான்சுவா பிளான்ஷெட் இந்த விமர்சனத்தை நிராகரித்துள்ளார். பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசு தற்போது 169 இடங்களுடன் ஆட்சியில் உள்ளது.
நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலத்தைப் பெற இன்னும் 3 ஆசனங்கள் தேவை என்னும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில், கியூபெக் மாகாணத்தில் காலியாக உள்ள டெரெபோன் (Terrebonne) மற்றும் டொராண்டோவின் இரு தொகுதிகளுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் லிபரல் கட்சிக்கு முழு பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று கூறப்படுகின்றது. தேர்தல் விதிகளின்படி, ஒரு கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறதோ அதற்கு ஏற்பவே அதன் பிரச்சாரச் செலவு வரம்பு (Spending Limit) நிர்ணயிக்கப்படும்.
டொராண்டோ தொகுதிகளில் பிளாக் கியூபெக் போட்டியிடாததால், அக்கட்சியால் மிகக் குறைந்த நிதியை மட்டுமே செலவிட முடியும். ஆனால், மூன்று இடங்களிலும் போட்டியிடும் லிபரல் கட்சிக்கு அதிக நிதி செலவிடும் வசதி உண்டு என்று கூறப்படுகின்றது.
