பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோவை வெனிசுலாவில் அமெரிக்க படைகள் பிடித்ததாக அறிவித்த பிறகு, வெனிசுல மக்கள் “அழுத்தமின்றி, அமைதியாகவும் ஜனநாயக முறையிலும் தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையில்” கனடா கரிசனை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
“மடூரோ 2018ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதால் கனடா அரசு அவரின் சட்டவிரோத ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை,” என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். “அதனால், வெனிசுலா மக்களுக்கு சுதந்திரம், ஜனநாயகம், அமைதி மற்றும் செழுமை என்பவற்றுக்கு வாய்ப்பு கிடைக்கவிருப்பதை கனடா அரசு வரவேற்கிறது என தெரிவித்தார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில் , கனடா “வெனிசுலா மக்கள் நிர்ணயிக்கும், அமைதியான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுக்கப்படும் மாற்றத்தைக்” ஆதரித்து வருகிறது எனவும் , மேலும் அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கனடா சர்வதேச விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை எந்த கனடியர்களும் வெனிசுலாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெனிசுயேலாவில் உள்ள கனடியர்கள் தங்களுக்கான தூதரக உதவியைப் பெற கொலம்பியாவில் உள்ள கனடிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமெனவும், 2019 முதல் வெனிசுலாவில் உள்ள தூதரகம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
