ஒட்டாவாவிற்கு அருகிலுள்ள உல்ஃப் தீவு (Wolfe Island) மற்றும் கிங்ஸ்டன் இடையிலான படகுப் போக்குவரத்து (Ferry Service) இயந்திரக் கோளாறு காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது.
தீவின் புதிய மின்சாரப் படகான ‘உல்ஃப் ஐலேண்டர் IV’ (Wolfe Islander IV), கடந்த திங்கட்கிழமை முதல் மின்சாரக் கோளாறு காரணமாகக் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அந்த தீவின் ஒரே போக்குவரத்து வழித்தடம் துண்டிக்கப்பட்டிருப்பது 1,400-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் திடீர் முடக்கத்தால் தீவு மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்துகளைச் சார்ந்துள்ள நோயாளிகள், மருந்துகள் தீர்ந்துவிடும் அபாயத்தில் உள்ளனர்.
தீவில் மருந்தகங்கள் இல்லாததால் அவர்கள் கிங்ஸ்டன் நகரையே நம்பியுள்ளனர்.
சுமார் 94 மில்லியன் டொலர் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட இந்தப் புதிய மின்சாரப் படகு, பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்தே பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
