கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனடியாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
வரிகளுக்கு எதிராக ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றைக் காரணம் காட்டியே அவர், இந்த முடிவினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விளம்பரத்தின் மூலம் கனடா “தீவிரமான மற்றும் மோசமான செயலில்” (egregious behavior) ஈடுபட்டதாக, டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்தி, அமெரிக்கப் பொதுமக்களிடம் வரி விதிப்புக்கு எதிரான செய்தியைப் பரப்புவதற்கு கனடா முயல்வதாகவும் அவர் கூறினார்.
கனேடியர்களின் இந்தக் கடுமையான நடத்தையின் அடிப்படையில், கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் இதன் மூலம் நிறுத்தப்படுகின்றன என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விளம்பரம், தனது உலகளாவிய வரி விதிப்புகளின் சட்டபூர்வத்தன்மை குறித்து விவாதித்து வரும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவில் “தலையிடும்” நோக்குடன் வடிவமைக்கப்பட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
சுமார் 75 மில்லியன் டொலர் செலவில், அமெரிக்க பார்வையாளர்களை இலக்கு வைத்து ஒன்டாரியோ அரசாங்கம் இந்த விளம்பரப் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த விளம்பரத்தில் இதில், முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் குரல் இடம்பெற்றிருந்ததுடன் வரிகளின் நீண்ட காலத் தாக்கம் குறித்து அவர் பேசியிருந்த கருத்துகளும் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்த விளம்பரத்தை ஒன்டாரியோ மாகாணத்தின் விளம்பரம் என்று குறிப்பிடாமல், ஒட்டுமொத்த கனடாவின் விளம்பரம் என்று அமெரிக்க ஜனாதிபதி தவறாகக் குறிப்பிட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
