கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டமான பில் 21-க்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கில், கனடாவின் மத்திய அரசு நேரடியாகத் தலையிட்டிருப்பது, மாகாண அதிகாரங்களை ஒடுக்கும் முயற்சி என கியூபெக் கடுமையாகச் சாடியுள்ளது.
இது பில் 21 சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு “நேரடித் தாக்குதல்” என்று கியூபெக் மாகாண அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் சட்டமா அதிபர் சீன் ஃப்ரேசர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பில் 21 சட்டத்தின் உள்ளடக்கத்தை நேரடியாக எதிர்க்கவில்லை என்றும், மாறாக, இந்த சட்டத்தைப் பாதுகாக்க கியூபெக் பயன்படுத்திய “Notwithstanding Clause” என்ற விதியைப் பயன்படுத்திய விதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
Notwithstanding Clause என்பது கனேடிய அரசியலமைப்பில் உள்ள ஒரு சிறப்பு விதி ஆகும்.
இது மத்திய அல்லது மாகாண அரசுகள் சில சட்டங்களை நிறைவேற்றும்போது, குடிமக்களின் உரிமைகளுக்கு எதிரானதாக இருந்தாலும், அதனை நீதிமன்றத் தலையீட்டிலிருந்து காக்க அனுமதிக்கிறது.
இந்த விதியை அடிக்கடி பயன்படுத்துவது, கனடா அரசியலமைப்பில் மறைமுகமாகத் திருத்தம் செய்வதற்குச் சமம் என்றும், அது கனடியர்களின் உரிமைகளுக்கு “ஈடுசெய்ய முடியாத சேதத்தை” ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கியூபெக் நகரத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய கியூபெக் நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட்டே, மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கியூபெக்கின் மீது மட்டுமல்ல, கனடாவில் உள்ள அனைத்து மாகாண சட்டமன்றங்களின் “நாடாளுமன்ற இறையாண்மையின்” மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு ஆனது, மாகாண அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்க, மறைமுக வழியைப் பயன்படுத்துவதாகவும் கியூபெக் நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.
