கனடாவின் பல மாகாணங்களில் இன்று கடுமையான வானிலை நிலவவுள்ளது.
கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயல் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் வெள்ளப்பெருக்கு, ஆபத்தான போக்குவரத்து நிலைமைகள், மற்றும் மின் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டாவா மற்றும் ரொறன்ரோ பெருநகரப் பகுதிகள் உட்பட தென்கிழக்கு ஒன்டாரியோவில் வசிப்பவர்கள், 50 மில்லிமீட்டர் வரையான மழைப்பொழிவு, மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்று, மற்றும் பெரிய ஆலங்கட்டி மழை ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரொறன்ரோவில் உள்ள முக்கிய சாலைகளில் ஏற்கனவே நீர் தேங்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க தாமதங்களும் ஏற்பட்டுள்ளன.
மஸ்கோகா ஏரிப் பகுதி “நீர்ப்பிடிப்பு நிலை அறிக்கை – நீர் பாதுகாப்பு புல்லட்டின்” கீழ் உள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்மட்டங்களும் ஆற்றுப் பாய்ச்சல்களும் இயல்பை விட அதிகமாகவே உள்ளன.
வடக்கு ஒன்டாரியோவில் சூறாவளி எச்சரிக்கைகள் நீக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் இன்னும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
மொன்றியல் மற்றும் தெற்கு கியூபெக்கின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான இடியுடன் கூடிய புயல் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளன.
பலத்த காற்று, பெரிய ஆலங்கட்டிகள், மற்றும் கனமழை ஆகியவற்றை உருவாக்கும் திறன் கொண்ட ஆபத்தான புயல்கள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
