சஸ்காட்செவன் மாகாணத்தின் அமுல்படுத்தப்பட்டதும் சர்ச்சைக்குரியதுமான ‘பெயர் மற்றும் உச்சரிப்பு’ (pronoun) கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் நீடிக்கும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாடசாலைகளில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்கள் பெயர் அல்லது உச்சரிப்பை மாற்றிக்கொள்ள பெற்றோரின் அனுமதி அவசியம் என்ற இந்த கொள்கை, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சட்ட மற்றும் பொதுமக்கள் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.
திங்களன்று வெளியான இந்தத் தீர்ப்பு, UR Pride Center for Sexuality and Gender Diversity என்ற அமைப்பு, தனது சட்டப் போராட்டத்தை கிங்ஸ் பென்ச் நீதிமன்றத்தில் தொடர வழிவகை செய்துள்ளது.
இந்தச் சட்டம் ஆனது, கனடாவின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தின் (Canadian Charter of Rights and Freedoms) பிரிவு 7 மற்றும் 15(1) போன்ற பல பிரிவுகளை மீறுவதாக UR Pride அமைப்பு
வாதிடவுள்ளது.
இந்தப் பிரிவுகள் கருத்து சுதந்திரம், தனிநபரின் பாதுகாப்பு மற்றும் சமத்துவஉரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கின்றன.
இந்தச் சட்டப் போராட்டமானது, சஸ்காட்செவன் அரசு 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த உச்சரிப்பு கொள்கை அறிவிக்கப்பட்டபோது தொடங்கியது.
இந்த கொள்கையானது மாற்று பாலின மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை, உருவாக்கும் என்று UR Pride அமைப்பு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்குப் பதிலடியாக, 2023 அக்டோபரில், அரசு பெற்றோர்களின் உரிமைகள் மசோதாவை இயற்றி, இந்தக் கொள்கையை சட்டமாக்கியது.
மேலும், சாசனத்தின் சில உரிமைகளை ஐந்து ஆண்டுகளுக்கு மீற அனுமதிக்கும் ‘தடை விதிக்கும் பிரிவை’ (notwithstanding clause) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
