பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் “மழை அவசரநிலையை” அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள உப்பு நீர்த்தேக்கப் பகுதியான சக்வால் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 24 மணி நேரத்தில் 423 மில்லி மீற்றர் மழை பெய்ததையடுத்து குறித்த பகுதியில் அவசரநிலையை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சக்வாலில் திடீர் வெள்ளத்தால் சிக்கிய மக்களை வெளியேற்ற இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாகாண அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாகாணம் முழுவதும் இன்றும் பருவமழை தொடரும் என்பதால் பஞ்சாப் முழுவதும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்ததையடுத்து, பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளைமை குறிப்பிடத்தக்கது.
