பிரதமர் மார்க் கார்னி உடனான சந்திப்பில், பழங்குடி சமூகத் தலைவர்கள், அரசின் புதிய சட்டமான Bill C-5 குறித்து, தங்கள் ஆழ்ந்த அதிருப்தியையும், சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்தச் சட்டம் தங்களது உரிமைகளை பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மனிடோபா மாகாணத்தைச் சேர்ந்த நிசிச்சவாயசிக் கிரீ சமூகத்தின் தலைவர் ஏஞ்சலா லெவாசர், “இது நல்லிணக்கம் அல்ல, இது சுரண்டல்” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உரிமைகளையும், தங்களது நிலங்களில் இருந்து எடுக்கப்படும் செல்வத்தில் நியாயமான பங்கையும் கோரினார்.
வெட்சுவெட்டன் சமூகத்தின் பரம்பரைத் தலைவர் நாமோக்ஸ், “அரசு முன்னரே ஒரு முடிவைத் தீர்மானித்துவிட்டு, அதை தங்கள் முன் கொண்டு வந்து வைத்துள்ளது” என்றும், இந்த சந்திப்பு ஒரு கண்துடைப்பு என்றும் கூறி விமர்சித்தார்.
இந்த சந்திப்பு, பழங்குடி சமூகங்களுடனான ஆலோசனைச் செயற்பாட்டின் ஒரு ஆரம்பமே என, கனேடிய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்த புதிய சட்டம் தங்களின் உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஏற்கனவே ஒன்பது பழங்குடி சமூகங்கள் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
