பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பலரது மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், இன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சுமார் 10 வீதி விபத்துக்கள் இடம்பெற்றதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
