‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய சுத்திகரிப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்டம், இன்று வவுனியா செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மேலதிக மாவட்டச் செயலாளர் நா. கமலதாசன் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை வளாகம் நீண்டகாலமாகச் சுத்திகரிக்கப்படாததால் சுற்றாடல் பாதிப்புகளும், வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவி வந்தன. இதற்குத் தீர்வு காணும் வகையில் வைத்தியசாலை வளாகத்தை மையமாகக் கொண்டு சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனுடன் இணைந்ததாக, வவுனியா அம்பலன்கொடல்ல கிராமத்தின் பிரதான வீதியின் இருமருங்கிலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
பொதுக் காரியங்களில் மக்களின் உழைப்பை இணைத்து, பிரச்சினைகளைக் கூட்டாகத் தீர்க்கும் கலாசாரத்தை உருவாக்குவதும், சிரமதானம் மூலம் பசுமையான சூழலை அமைப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
