செயற்கை நுண்ணறிவு, உயிரியல் மற்றும் நோயெதிர்ப்பு அறிவியல் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து பிரான்ஸ் நாடு மற்றும் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழுக்கள் இணைந்து, ”புதிய சர்வதேச ஆய்வுக்கூடம்” ஒன்றை உருவாக்கியுள்ளன.
பங்கேற்கும் பல்கலைக்கழகங்களால் ஒருங்கிணைந்த சர்வதேச ஆய்வுக்கூடம் எனவும் பிரான்சின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் (Inserm) ‘கூட்டு ஆய்வுக்கூடம்’ (Joint Lab) என்ற அந்தஸ்துடனும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பல்துறை உயிரியல் தரவு ஆய்வு (Multiomics) தொடர்பான செயற்றிட்டங்களை இந்த ஆய்வுகூடம் முன்னெடுக்கவுள்ளது.
இந்தக் கூட்டு ஆய்வுக்கூடம் கியூபெக் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், லாவல் பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் அதிநவீன உட்கட்டமைப்புகள், தரவுகள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கியூபெக்கின் லாவல் பல்கலைக்கழக மருத்துவப் பீடப் பேராசிரியரும் லாவல் பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் ஆய்வாளருமான அர்னோ ட்ரொயிட் (Arnaud Droit) இந்த ஆய்வுக்கூடத்தின் இணை-இயக்குநராகச் செயற்படவுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டே பல்கலைக்கழக (Université Paris Cité) விஞ்ஞானப் பீட இணைப் பேராசிரியரும் Inserm ஆய்வாளருமான பியர் நியோஷ்ஷும் (Pierre Nioche) இந்த ஆய்வுகூடத்தின் மற்றுமொரு இணை-இயக்குநராகப் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
