கனடாவின் நயாகரா பிராந்தியத்திலிருந்து ரொரோன்டோ நகருக்குச் செல்வோருக்கு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் புதிய விமானச் சேவை பிரபலமடைந்து வருகிறது.
Aspen Air நிறுவனம் ஆரம்பித்துள்ள இந்தச் சேவை, பயணிகளிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நயாகரா மாவட்ட விமான நிலையத்திலிருந்து ரொறன்ரோவின் Billy Bishop விமான நிலையத்துக்கான விமானப் பயணம் சுமார் 11 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட ஒரு வழிப் பயணச் சீட்டின் விலை 126 கனேடிய டொலர்கள்.
தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரு தடவைகள் இரு திசைகளிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்தச் சேவைக்காக இரண்டு வாரங்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைகள் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் வசந்த காலத்தில் தினசரி விமானச் சேவையை ஆரம்பிக்கவும், கிச்சனர் – வாட்டர்லூ பகுதிக்கும் சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து விரைவாகப் பயணிக்க விரும்பும் நயாகரா மற்றும் ரொரோன்டோ மக்களுக்கு இந்தச் சேவை புதிய மாற்றாக அமைந்துள்ளது.
