மொண்ட்ரியலில் உள்ள பொம்பார்டியர் (Bombardier) விமான நிறுவனத்தின் ஊழியர்கள், நிறுவனத்தின் இறுதி ஒப்பந்தச் சலுகையை நிராகரித்துள்ளனர்.
மேலும் அவர்களில் பெரும்பான்மையானோர் வேலைநிறுத்தத்திற்கான அனுமதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமது திறன்கள் மற்றும் இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், பொம்பார்டியர் நிறுவனம் அளிக்க முன்வந்துள்ள தற்போதைய சலுகை போதுமானதல்ல என, ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மொண்ட்ரியல் மற்றும் டோர்வால் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில், ‘சலஞ்சர்’ (Challenger) விமான உற்பத்தியில், பணியாற்றும் விமான இணைப்பாளர்கள், இயந்திரவியலாளர்கள் மற்றும் ஏவியோனிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்களே, இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது அமுலில் உள்ள ஊழியர்களின் கூட்டு ஒப்பந்தம் அடுத்த மாதம் 4ஆம் திகதி காலாவதியாகின்ற நிலையில், அந்தத் திகதிக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அழுத்த நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தனது சலுகை “எல்லா வகையிலும் சிறப்பானது” எனப் பொம்பார்டியர் நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
