கனடாவின் மொன்றியல் துறைமுக விரிவாக்கத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலுக்கு கீழ்புறமாக, St. Lawrence ஆற்றங்கரையில் அமைந்துள்ள Contrecoeur பகுதியில், புதிய துறைமுக மேடை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
தளத்தில் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆற்றுக்குள் கற்களைக் கொண்டு தற்காலிக கட்டமைப்பு ஒன்றை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மொன்றியல் துறைமுக அதிகாரசபையின் தகவலின்படி, இந்தக் கட்டமைப்பு கனரக இயந்திரங்களை இயக்குவதற்கும் புதிய துறைமுக மேடையை நிர்மாணிப்பதற்கும் தற்காலிக பணித்தளமாக பயன்படுத்தப்படும்.
பின்னர், இந்தப் பகுதி கப்பல் சரக்கு கொள்கலன்களை சேமிக்கும் Container Yard ஆக மாற்றப்படும்.
இதுவரை சுமார் 250,000 தொன் கற்கள் திட்டப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் மேலும் ஆயிரக்கணக்கான தொன் கற்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கனடா மத்திய அரசால் விரைவான ஒப்புதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் “Nation-Building Project” திட்டங்களில் ஒன்றாகும்.
துறைமுக விரிவாக்கத்திற்காக DP World நிறுவனத்துடன் Montreal Port Authority கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மேலும், திட்டத்துக்கு நிதியளிப்பதற்காக Canada Infrastructure Bank நிறுவனத்திடமிருந்து சுமார் 1.16 பில்லியன் கனேடிய டொலர் கடனுதவியும் பெறப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்த பின்னர், மொன்றியல் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரித்து, கனடாவின் வர்த்தக மற்றும் விநியோகச் சங்கிலி உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

