மொன்றியல் (Montreal) நகரில் எரிபொருள் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளதால், வாகனச் சாரதிகளுக்குச் சாதகமான நிலை உருவாகியுள்ளது.
எரிபொருள் விலை கண்காணிப்புத் தளமான ‘கேஸ்படி’ (GasBuddy) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இன்று மொன்றியலில் சாதாரண பெற்றோல் லீற்றர் ஒன்றின் சராசரி விலை சுமார் 163 சதம் (cents) ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் மொன்றியலில் பதிவான மிகக் குறைந்த எரிபொருள் விலை இதுவாகும்.
இதேவேளை, மொன்றியலின் சுட்-ஓவெஸ்ட் (Sud-Ouest) பகுதியிலுள்ள நோட்ரே-டேம் மேற்கு வீதியில் (Notre-Dame St. W.) அமைந்துள்ள ‘பெட்ரோ-கனடா’ (Petro-Canada) எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சாதாரண பெற்றோல் லீற்றர் ஒன்று 162.9 சதத்திற்கும், டீசல் லீற்றர் ஒன்று 271.9 சதத்திற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 20 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளமையே, இந்த விலை குறைப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் அமெரிக்கா – ஈரான் இடையே போர் ஆரம்பமானதைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி ‘பிரெண்ட்’ (Brent) மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 116 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தது. எனினும், இன்று காலை பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 94.72 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
மொன்றியலைப் போலவே நாடு முழுவதிலும் எரிபொருள் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் தேசிய சராசரி விலை 148.6 சதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பதிவான 174.3 சதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 30 சதங்கள் குறைவாகும்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை தொடர்பான எதிர்வுகூறல்கள் தொடர்ந்தும் நிலையற்ற தன்மையிலேயே காணப்படுவதாகவும், சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் விரைவாக மாறக்கூடும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
