கியூபெக் மாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்கொலைகள் (Femicides) மற்றும் நெருங்கிய துணைவர்களால் இழைக்கப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 30-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை ஆரம்பித்துள்ளன.
‘குடும்ப வன்முறைக்கு எதிரான கியூபெக் நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று செயின்ட்-ஜெரோம் (Saint-Jérôme) நகரில் நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக, தொழிற்சங்க, சட்ட மற்றும் நிறுவன ரீதியான நிபுணத்துவத்தை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே இதன் பிரதான நோக்கமாகும் என இதன் ஸ்தாபகர்கள் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பெண்கொலைகளின் எண்ணிக்கை 21 ஆகப் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“தாம் வெறுமனே மேலதிக கலந்துரையாடல்களிலும் ஆலோசனைகளிலும் மட்டும் ஈடுபட விரும்பவில்லை” என அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், “குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை உறுதி செய்வதற்கும் தாம் ஒன்றிணைய விரும்புவதாக” அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் அரசாங்கத் தலைவர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமன்றி, செயற்பாட்டு வடிவத்திற்கு மாற்றுவதற்குத் தமது கூட்டு முயற்சியின் ஊடாக அழுத்தம் கொடுக்க எதிர்பார்ப்பதாக இந்தக் கூட்டணி கூறியுள்ளது.
இந்தப் புதிய கூட்டணியின் ஸ்தாபக உறுப்பினர்களாக ‘எஸ்.ஓ.எஸ் வன்முறை’ (SOS Violence conjugale), ‘ரிகார்ட் என் எல்லே’ (Regard en Elle) ஆகிய முக்கிய உரிமைக் குழுக்கள், பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும் எஃப்.டி.கியூ (FTQ), சியூ.பி.இ (CUPE) உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் டசின் கணக்கான கிளைகள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
