சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய சிவராசா அனோஜன், தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மதம் சார்ந்த கருத்தொன்று தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும், அரசுத் தரப்பு மேற்கொண்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், அனோஜனை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இலங்கையின் விசேட சட்டத்தரணிகள் குழுவும் சவூதி அரேபியாவுக்குச் சென்று சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி சவூதி அரேபிய அரசுத் தரப்பு வழக்குத் தொடர்தல் திணைக்களம், அவருக்கு எதிரான எஞ்சிய சட்ட நடவடிக்கைகளையும் தொடரப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், சிவராசா அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கம், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கும் இலங்கை அரசாங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
