கியூபெக் மாகாணத்திலுள்ள போஸ் (Beauce) பிராந்தியத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவரின் நிலைமை தீவிரமாக உள்ளபோதிலும், அவர் உயிரிழந்துவிட்டாரா என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என கியூபெக் மாகாண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயின்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் ‘நினைவுகூரல் நாள்’ (Remembrance Day) நிகழ்வுகளுக்காகவே இந்த விமானம் பயன்படுத்தப்படவிருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த நிலவரங்களை தாம் உன்னிப்பாகக் அவதானித்து வருவதாகவும், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கை லாபோயின்ட் ஜூனியருடன் (Guy Lapointe Jr.) தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும் கியூபெக் முதலமைச்சர் பிளமொண்டன் தெரிவித்துள்ளார்.
கியூபெக் நகரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செய்ன்ட்-ஜார்ஜஸ் (Saint-Georges) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 10-வது வீதிப் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“தற்போதைய நிலவரப்படி, விமான ஓட்டி அல்லது வேறு யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பது குறித்த முழுமையான விபரங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை” என்று குறிப்பிட்ட கியூபெக் முதலமைச்சர் பிளமொண்டன், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் மாகாண பொலிஸாரும் அவசர உதவிப் படையினரும் தொடர்ந்தும் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
