கனடாவின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில், Rural Community Immigration Pilot திட்டத்தை நிரந்தரக் குடியேற்றத் திட்டமாக மாற்றுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் Lena Metlege Diab, நேற்று 9ஆம் திகதி Nova Scotia மாகாணத்தின் Pictou County பகுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை பரீட்சார்த்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், இனிமேல் நிரந்தரமான குடியேற்றப் பாதையாகச் செயல்படும்.
தற்போது இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் 14 கிராமப்புற சமூகங்களைத் தொடர்ந்து உள்ளடக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில சமூகங்களையும் இணைக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்புவோர்:
பங்கேற்கும் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றிடமிருந்து வேலைவாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட கல்வி மற்றும் தொழில்துறைத் தகைமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட சமூகத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்.
திட்டத்தின் மொழி மற்றும் ஏனைய தகைமை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2027ஆம் ஆண்டுக்கான குடியேற்ற இலக்கில் இந்தத் திட்டத்திற்கு 5,500 நிரந்தர வதிவிட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கனடாவின் பெரிய நகரங்களில் மட்டுமே குடியேற்ற வாய்ப்புகளைத் தேடாமல், சிறிய நகரங்களிலும் வேலைவாய்ப்புகளைத் தேடும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக அமையலாம்.
