யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் கடந்த வருடம் திருட்டில் ஈடுபட்ட கும்பலை , யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர் .கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 2025ஆம் ஆண்டு வீட்டு தளபாடங்கள் , இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 17 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ஒரு வருட காலத்தின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றத்தில் நான்கு பேரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , குறித்த வீட்டில் திருடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
