முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) ஆட்சிக் கால ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக $12 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, சமர்ப்பிக்கப்பட்ட புதிய கூட்டாட்சி நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய நூலக மற்றும் காப்பகப் பிரிவு (Library and Archives Canada) இத்தொகையைப் பயன்படுத்தி ட்ரூடோவின் பதிவுகளைச் சேகரித்துப் பாதுகாப்பதோடு, பொதுமக்களின் பார்வைக்கும் வழங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடானது நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் செலுத்தப்படவுள்ளது. இது நாட்டின் வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆவணப் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த தொகையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்னதாக, ட்ரூடோவின் முன்னோடியான ஸ்டீபன் ஹார்பரின் (Stephen Harper) ஆவணங்களைச் சேகரித்து நடைமுறைப்படுத்துவதற்கு 8.3 மில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
