பிரான்ஸ் முழுவதும் உள்ள வர்த்தகக் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பிரீஸர்களை முடக்கிய இணையத் தாக்குதலுக்கு (Cyberattacks) ஈரானின் புரட்சிகரக் காவல்படையே (Revolutionary Guards) காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் திங்கட்கிழமை (09.11.2026) குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பிரான்ஸின் நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்களைப் பாதித்த இந்த இணையத் தாக்குதல்கள், பிப்ரவரியில் தொடங்கிய ஈரான் போரின் போது நடத்தப்பட்ட மிக மோசமான டிஜிட்டல் சீர்குலைவுகளில் ஒன்றாகும்.
இத்தாக்குதலில் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை அதிகமாக உயர்த்தப்பட்டதால் சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டன.
இதனால் அழுகிய இறைச்சிகள் மற்றும் உருகிய ஐஸ்கிரீம்கள் தூக்கி வீசப்பட்டன.
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரெஞ்சு உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், ஈரானிய புரட்சிகரக் காவல்படையுடன் தொடர்புடைய ‘ஷாகித் காவே’ (Shahid Kaveh) என்ற இணையத் தாக்குதல் பிரிவே இதற்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் ஹமீத் ரெசா லஷ்கரியான், மஹ்தி லஷ்கரியான் மற்றும் ரெசா சலார்வந்த் ஆகிய மூன்று நபர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இத்தாக்குதல் தொடர்பில் ஈரானிய தூதருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ழான் நோயல் பாரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் தடைகளை விதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச பிடியாணை (International arrest warrants) பிறப்பிக்குமாறு பாரிஸ் அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, இத்தகைய இணையத் தாக்குதல்களை நடாத்துவதை ஈரான் வழக்கமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
