ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியை (Sheikh Mohammed bin Abdulrahman Al-Thani) இன்று திங்கட்கிழமை (09.11.2026) வாஷிங்டனில் சந்திக்கவுள்ளனர்.
கடந்த வாரம் டெஹ்ரானுக்கு விஜயம் செய்த கத்தார் பிரதமர், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும், உடனடி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே அமெரிக்க மற்றும் வளைகுடா உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலுடன் இணைந்து தொடங்கிய இந்தப் போர் 8 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரானின் தற்போதைய போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள டிரம்ப் மறுத்து வருகிறார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது, பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் குண்டுவீச்சை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஆனால், இக்கோரிக்கைகளை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ நிராகரித்துள்ளார்.
போர் தொடரும் அதேவேளையில், ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவு மீது அமெரிக்கா இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரானும், சவூதி அரேபியா மீது யேமனின் ஹவுதி அமைப்பும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் தோல்விக்கு ஈரான் போரே காரணம் எனப் பல தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், உடனடியாகப் இராஜதந்திர திருப்புமுனை ஏற்படும் என நம்பவில்லை என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
