மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அமெரிக்கா தனது நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், வளைகுடா பிராந்தியம் முழுவதையும் ஒவ்வொரு நாடாக இருளில் மூழ்கடிக்கும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாத நடுப்பகுதியில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின் பாலம் அல்லது மின்சார நிலையங்களை அழிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் தூதரக இடைத்தரகர்கள் மூலமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்குத் தனது எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளது. அதில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது சிறு தாக்குதல் நடத்தப்பட்டாலும், வளைகுடா நாடுகளின் மின்சார உற்பத்தி நிலையங்கள், மின் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை (Desalination Plants) இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளின் கடற்கரையோரம் அமைந்துள்ள முக்கிய மின் நிலையங்கள் ஈரானிய ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பிற்குள் இருப்பதாகவும், தாங்கள் தாக்கவுள்ள இலக்குகளின் நீண்ட பட்டியலைத் தயார் செய்து வைத்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளதாகப் பிராந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் இந்தத் தீவிரமான அச்சுறுத்தலைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் மிகப்பெரிய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்த நாடுகளின் ராஜதந்திர வேண்டுகோளை ஏற்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணும் நோக்கோடும் திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் வளைகுடாப் பகுதியில் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

